Sunday, July 25, 2010

ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும்

ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும்

முனைவர் அ. பரிமளகாந்தம்,
இணைப்பேராசிரியர்,
அகராதியியல்,
பி.எஸ்.தெலுங்குப் பல்கலைக்கழகம்,
ஐதராபாத் – 500 004.



முன்னுரை:

பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்தியா பல்வேறு மொழிகளுக்கும், பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மட்டுமேயல்லாமல் பலவேறு கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்கின்றது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார் ஆன்றோர். அந்த அறுபத்து நான்கு கலைகளில் சிற்பக்கலையும் ஒன்று.

கற்கால மனிதர்களுக்கு1 சிற்பக் கலை பற்றிய ஞானம் உண்டு என்ற குறிப்பினைத் தந்த பி.நாகேஸ்வரராவ் என்பார் சிற்பக் கலைகளின் பங்கு ஒரு நாட்டோடு எங்ஙனம் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்பதைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு நாட்டின் தேசீயக் கொடி, தேசீயக் குறியீடு, அந்நாட்டு மன்னவனின் இராஜமுத்திரை, மணி மகுடம், சிம்மாசனம், அந்நாட்டு மக்களின் ஆடை அணியும் முறை, நாணயம், நாட்டு மக்களின் தனித்தன்மை, வாழுமிடம், தட்பவெட்ப நிலை, சாலை, கட்டிடங்கள், அணைக்கட்டுகள் போன்ற எல்லாமே அந்நாட்டின் சிற்பங்கள்தாம் என்கிறார். (பி.நாகேஸ்வரராவ், 2000).


தமிழ் இலக்கியங்களின் பாடு பொருள்களாக அகம், புறம் என்ற இரண்டும் விளங்குகின்றன. தலைவன், தலைவியினுடைய காதல் வாழ்க்கையைக் குறிப்பது அகம் என்றும், தலைவனின் புகழ், வீரம், கொடை போன்ற புறச் செய்திகளைக் குறிப்பது புறம் என்றும் பாகுபாடு செய்கின்றன.

நோக்கம்:

ஆந்திர நாட்டுச் சிற்பக் கலைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு, அச்சிற்பக்கலையைத் தமிழ்ச் சங்க இலக்கியங்களின் பாடு பொருள்களுள் ஒன்றான புறப் பொருளோடு பொருத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இக் கட்டுரையில் வரலாற்றுக்குட்ட காலத்தில் தோன்றிய சிற்பக் கலைகள் மட்டுமே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சோமேஸ்வரரா (1975), நாகேஸ்வரராவ் (2000) ஆகிய இருவரும் ஆந்திர நாட்டின் சிற்பக் கலை வளர்ச்சியை வரலாற்று முறையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. ஆந்திர நாட்டுச் சிற்பக் கலை சாதவாகன மன்னர்களின் காலத்திலிருந்து (அதாவது கி.பி. 100) தொடங்கி இப்போதைய நவீன காலம் வரை அதாவது 1947 வரை வளர்ந் திருக்கிறது என்று குறிப்பிடுகின்றார்கள்.


ஆந்திர தேசத்தை ஆண்ட மன்னர்கள் சாதவாகனர்கள், இக்க்ஷவாகுலு, சாலங்காயனலு, விஷ்ணுகுண்டிலு, பல்லவர்கள், பாதாமி சாளுக்கியர்கள், கிழக்குச் சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், கிழக்குக் காங்குலு, காகத்தியர்கள், ரெட்டி ராஜாக்கள், விஜயநகர மன்னர்கள் முதலியோர் ஆவர். இவர்களாலும் ஜைன மதப் பிரசாரம் செய்பவர்களாலும் நிர்மாணிக்கப்பட்ட சிற்பங்கள் பெரும்பாலும் மதத்தைத் தழுவியதாகவே இருக்கிறது. இச் சிற்பங்கள் புராண இதிகாச சாம்பிரதாய முறையில் வாஸ்து சிற்பங்களாகவும், பிரதிமா சிற்பங்களாகவும் இருக்கின்றன. இவை ஞானமார்க்கத்தையும், தர்ம மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் போதிக்கும் விதமாக அமைந்திருக் கின்றன. மன்னர்களும் மக்களும் புருஷார்த்தமான, தர்மம், அர்த்தம், காமம், மோட்சங்களை அடைவதே நோக்கமாகக் கொண்ட சிற்பங்களை உருவாக்கி இருப்பதால் இது ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்படுகிறது.

ஆந்திரதேசத்தில் உள்ள சிற்பங்களை மன்னர்கள் தாங்கள் பின்பற்றிய மதத்தைப் பற்றியதாகவும், சில மன்னர்கள் போர் புரிந்து வெற்றிவாகை சூடி அந்த மகிழ்ச்சியை கோவில் கட்டி அதில் சிற்பங்களை அமைத்தாகவும், சிற்சில சமயங்களில் இராணிகளின் விருப்பங்களுக்காகக் அமைக்கப்பட்ட சிற்பங்களாகவும் இருக்கின்றன. இச் சிற்பங்கள் பெரும்பாலும் காந்தாரம், மதுர, அமராவதி சிற்ப சம்பிரதாய முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இச் சிற்பங்கள் மத சம்பந்தமான விஷயங்களைக் கூறுபவையாகவும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பாடு பொருள்களில் ஒன்றான புறப் பொருளை ஒப்புமைப்படுத்தும் விதமாக அமைந்த சிற்பங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.

சாதவாகன மன்னர்களின் காலம் கி.மு.235 – கி.பி.202. இம்மன்னர்கள் பெளத்த மதத்தைத் தழுவியவர்கள். பாஜாக் குகைகளில் காணப்படும் சிற்பக் காட்சிகளில் ஒன்று, நான்கு குதிரைகள் பூட்டிய இரதத்தில், தன் மனைவியுடன் உலா வரும் மன்னவன் அரக்கனுடன் சண்டையிட்டு அவனை விரட்டியடிக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பக் காட்சி, தமிழ் இலக்கியப் புறப்பொருள்களுள் ஒன்றான தலைவனின் வீரத்திற்கு ஒப்பிடும் படியாக அமைந்துள்ளது. மேலும், அமராவதியில் காணப்படும் சிற்பக் காட்சிகளில் ஒன்று சாதவாகன் மன்னன் ஒருவன், மக்களின் நலனுக்காக கனகாபிஷேகம் செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பக் காட்சி சங்க இலக்கிய புறப்பொருள் கூறுகளில் ஒன்றான கொடைக்கு ஒப்பிடுவதாக அமைந்துள்ளது. மற்றும் அமராவதி ஸ்தூப பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்துடன் கூடிய வளைய உருவ முத்திரைகள் தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களோடு ஒப்பிடும் படியாக அமைக்கப்பட்டுள்ளன. சாதவாக மன்னர்களின் சிற்பங்கள் மத சகிப்புத்தன்மைக்கும் மக்கள் ஆதரவிற்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

சாதவாகனர்களின் பழங்கால சிற்ப கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது சாஞ்சி ஸ்தூபி தோரணம். இதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பௌத்த யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், புத்தரின் வாழ்க்கை வரலாற்றோடு, புத்த பெருமான் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குப் போவது போன்ற புத்ததேவனின் வாழ்க்கைக் கட்ட நிகழ்ச்சிகளும், சில கொடை வள்ளல்களின் சிலைகளும் சிற்பமாகக் காணப்படுகின்றன. அதே தோரணத்தில் பௌத்த ஜாதகக் கதைகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிலைகள் அம்மன்னர்கள் பின்பற்றிய மதத்தையும் அம்மதத்திற்கு அம்மன்னர்கள் அளித்த சிறப்பையும் அவர்கள் கொடையாக அளித்த நிதி உதவியையும் தமிழில் கூறப்படும் தலைவனின் புகழ், கொடை என்ற புறப்பொருள்களுக்கு ஒப்புமையாகக் கூறலாம். பிற்காலத்தில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் போன்ற அரசர்கள் கோயில் சிற்பங்களுடன் தங்கள் சிற்பங்களையும் தங்கள் இராணிமார்கள், இராஜகுமாரர்கள், சாமந்தர்கள் முதலியோரின் சிற்பங்களையும் செதுக்கி யுள்ளனர். இவர்களையும் கொடை வள்ளல்கள் என்றே குறிப்பிடு கிறார் சோமேஸ்வரராவ் (1975).

பெரும்பாலும் ஆந்திராவை ஆண்ட அரசர்களின் காலத்தில் பௌத்த, ஜைன மதங்கள் செல்வாக்குப் பெற்ற காரணத்தினால் பௌத்த ஜைன சிற்பங்கள் ஏராளாமாகக் காணப்படுகின்றன இருப்பினும் இந்து மதத்தைத் தழுவி, கோயில்கள் சிற்பங்கள் அமைத்த அரச வம்சங்களும் இருக்கின்றன. அவற்றுள் விஷ்ணு குண்டிலு வம்சத்தவர்களின் சிற்பங்களாக மொகல் ராஜபுரக் குகையில் கம்பங்களில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்குதல், பூதேவியை வராகவதாரம் எடுத்துச் சமுத்திரத்திலிருந்து கிருஷ்ணன் கொண்டு வருவது, நரசிம்மன் இரணியகஸ்யபுவை வதம் செய்வது, த்ரேவிக்ரமன் பலியைக் கொல்லுதல், ஜ்வால கம்ப ரூபத்தில் லிங்கோத்வம், பிரம்ம, விஷ்ணு விப்ராந்தி செய்யும் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை விஷ்ணுகுண்டிலு வம்ச அரசர்களின் இந்து மதப் பற்றையும் அம்மதத்திற்கு அவர்கள் செய்த கொடையையும் வெளிப்படுத்துவது தமிழ் இலக்கியப் புறப் பொருளான கொடைக்கு ஒப்பாகக் கருத வாய்ப்பளிக்கின்றன.

விஷ்ணு குண்டிலு வம்ச அரசர்களைப் போலவே காகத்தீய அரச வம்சத்தவர்களும் இந்துக் கோயில்கள் பலவற்றைக் கட்டியுள்ளனர். இத்துடன் ஜீர்ணாலயமும் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன.. ஆயினும் அழிவில் பிரதாபருத்திரனின தலை, யானைகள், குதிரைகள், அன்னங்கள் கஜசிங்க சிற்பங்களின் வரிசைகள் இன்னும் எத்தனையோ அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன, இச்சிற்பங்களில் காணப்படும் யானைகள், சிங்கங்கள் குதிரைகள் போன்றவை தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களுள் ஒன்றான போருக்குச் சான்றாக அமைகின்றன.

தமிழ் இலக்கியங்களில் புறப் பொருள் கூறுகளாக பகை வேந்தனின் புறத்திடத்திற்குச் சென்று சூழ்ந்து தங்குதல், தாக்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், பகைவர்களுடன் போரிட்டு வென்று மீளுதல், கவர்ந்து கொண்ட பசுக்கூட்டங்களை வருத்தாது மெதுவாக ஓட்டி வருதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்று அப்படியே அமையாவிடினும், பகை கொண்ட அரசனுடன் போரிட்டு, அங்குள்ள பொருட்களையும், ஆட்களையும் கொண்டு வருதல் போன்ற நிகழ்ச்சிகள் ஆந்திர சிற்பக் கலையில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சான்றாக பகையரசனை வென்று பாதாமி விக்கிரமாதித்தியன் தன் வெற்றிக்குச் சின்னமாக கங்கா, யமுனா துவார பந்தத்தை கொண்டு வருகிறான். கீழைச் சாளுக்கிய மன்னனான குணக விஜயாதித்தன் இராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணன் என்பவனைப் போரில் வென்று மேலே சொன்ன துவார பந்தத்தை பிக்கவோலு என்று இடத்திற்குக் கொண்டு வந்து கீழைச் சாளுக்கிய தேவாலய நிர்மாணத்தில் பயன்படுத்தி இருக்கிறான் என்றும் சோமேஸ்வரராவ் குறிப்பு சொல்கிறது.

சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் காஞ்சியை வெற்றி பெறுகின்றான். அங்குள்ள இராஜசிமஹேஸ்வர அல்லது கைலாச நாதர் தேவலாயம் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பைப் பார்த்து, அதன்மேல் ஆசைப்பட்டு, அதனால் தூண்டப்பட்டு காஞ்சி சிற்பிகளைத் தன் தேசத்திற்கு வரவழைத்து தேவாலயம் எழுப்பினான் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் தலைவனின் வீரம் என்னும் புறப்பொருளுக்குச் சான்றாக எண்ணப்படும் விதமாக உள்ளது. வெற்றி பெற்ற நாட்டிலிருந்து பொருட்களைக் கவர்ந்து வராமல் ஆட்களை/சிற்பிகளைக் கொண்டுவந்து கோயில் பணியில் ஈடுபடுத்தி கோயில்களைக் கட்டுவது.

இரண்டாவது விஜயாதித்தன் என்ற பெயரில் புகழ் பெற்ற நரேந்திர மிருகராஜா பனிரெண்டாண்டுகளில் 108 போர் செய்து வெற்றி பெற்று, சின்னங்களாக 108 தேவாலாயங்களை கட்டியிருக்கிறான் என்று தன் மன சில்ப சம்பத (1975) என்ற புத்தகத்தில் டி. சோமேஸ்வரராவ் குறிப்பிடுகிறார்.

இராஷ்டிரக் கூடர்களின் ஜைன சிற்பங்களில் தர்மத்திற்கு சங்கேதமாக வைரம், மான் சிங்காசன சிங்கங்கள், தர்ம சக்கர ஸ்தம்பங்கள், மூன்று இரத்தினங்களை உடைய ஸ்தூபங்கள் உள்ளன. இவற்றில் சில பௌத்த தர்மத்திற்கு சங்கேதங்கள். இது இராஷ்டிரகூடர்களின் மதப் பற்றையும் அவர்கள் அம் மதத்திற்குக் கொடுத்த கொடையையும் விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியப் புறப் பொருளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

இந்து மத தேவதையின் விக்கிரகங்கள், இந்திரன், சரஸ்வதி, கணபதி, குமாரசுவாமி, ஈஸ்வரன், சாமுண்டி, காளி, கஜலட்சமி, குபேரன் போன்ற சிற்பங்களைத் தங்கள் தேவாலாயங்களில் ஆந்திர நாட்டுச் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். இது தமிழ் இலக்கியப் புறப் பொருளில் கூறப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து என்னும் புறப்பொருளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது

விஜயநகர சிற்பத்தில் போருக்குரிய சின்னங்களான ஆயதம் தாங்கிய போர் வீரர்கள், குதிரை வீரர்களின் பொம்மைகள், யானைகளின் வரிசை போன்ற தமிழ் இலக்கியப் புறப் பொருளுக்குரிய அம்சங்கள் காணப்படுகின்றன.

முடிவுரை:

இவ்வாறு சாதவாகனர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன யுகம் வரை ஆந்திர நாட்டுச் சிற்பக் கலைகளில் ஆந்திராவை ஆண்ட அரசர்களின் வீரத்திற்கும், கொடைக்கும், புகழுக்கும் சான்றாக விளங்கும் சிற்பங்கள் எத்தனையோ குவிந்து கிடக்கின்றன. இவை தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களுடன் பொருந்தி அதற்குப் பொருத்தமாக இருப்பது வியக்கத்தக்கவையேயாகும். தமிழ் இலக்கியங்கள் பாடு பொருளாகப் புறப்பொருள் என்று ஒரு பகுப்புச் செய்து அதை ஒரு இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தி இலக்கியங்களில் கையாளப்ப்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கில் இதை இந்தப் பகுப்பு என்று பகுத்துச் சொல்லாமல் செயல்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் மொழி வேறாக இருந்தாலும், கலாச்சாரங்களில் சிற்சில வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பதை மேற்கூறிய சிற்பக் கலையில் காணப்படும் புறப்பொருள் கூறுகளிலிருந்து புரிகிறது.

அடிக்குறிப்புக்கள்:

1. கற்கள் என்பது தெலுங்கில் சிலைகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. தமிழில் பழைய கற்காலம், புதி. கற்காலம் என்று குறிக்கப்படுவது தெலுங்கில் பாத்த சிலல யுகம், கொத்த சிலல யுகம் என்று குறிப்புடுகின்றார்கள். (பி.நாகேஸ்வரராவ், 2000)
துணை நூல்கள்:

1. கேசிகன் புலியூர்,1981. தொல்காப்பியம் தெளிவுரையுடன், பாரி நிலையம், சென்னை – 500108.

2..சோமேஸ்வரராவ், டி. 1975. மன சில்பகளா சம்பத, ஆந்திரபிரதேஷ் லலிதகளா அகடமி, ஹைதராபாத் – 500 004.

3. நாகேஸ்வரராவ், பேதபாடி.2000 சில்பாகமசெந்த்ர சாந்த்ர, சாயி பிரஸ், ஹைதராபாத் – 29.

4. Sarasvathi, S. 2009. Dance as depicted in kakatiyan sculpture and literature, Venu printers, Hyderabad.

1 comment:

  1. Casino Poker Bonus Codes & Promotions
    The 프로즌 먹튀 Best Casino Poker Bonuses 강인경 마루에몽 and Free Spins · Top casino free play w88 bonus · Casino Royale · Best casino bet365 kor free spins · No deposit casino bonus · 메이저사이트 추천 Jackpot Party · Casino

    ReplyDelete