திருவள்ளுவர் கூறும் நானோ தொழில் நுட்பம்
பேராசியர். R.சந்திரமோகன்
இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி,
தேவகோட்டை-630303
வள்ளுவனும் அறிவியலும்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்: “ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்”. அதன் மூலம் அவர்கள் செயற்கரிய செய்வார் என்றும் விளக்கமளிக்கிறார். ஆராய்ந்து தெளிந்த பல அறிவியற் கூறுகள் காலந்தோறும் நிறுவப்பெற்று வருகின்றன. அவ்விதமான விஞ்ஞான முடிவுகள் எதையும் வள்ளுவன் நிறுவவில்லை; ஆனால் தீர்க்கதரிசியான வள்ளுவன் அவற்றில் பலவற்றை முன்கூட்டியே அறிந்திருந்தான்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
என்பது ஒரு புகழ் பெற்ற குறட்பா. நிறையற்ற மயிலிறகேயானாலும், அது ஒரு வண்டியில் அளவிற்கு அதிகமாக ஏற்றப்பட்டால், அதன் அச்சு முறிந்து போகும். இவ்விதமான அறிவியல் செய்திகள் பல குறட்பாக்களில் காணக் கிடைக்கின்றன. இதைத் தமிழறிஞர்களும் எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றனர். எனில், பொதுவான அறிவியல் உண்மைகளைக்கு அப்பால், 35 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுணரப்பட்ட, இன்று பெரும் வளர்ச்சி கண்டு வரும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகளைப் போலும் வள்ளுவன் உணர்ந்திருக்கிறான். குறட்பாக்களில் நேராகவும் மறைபொருளாகவும் உள்ள நானோ அறிவியல் நுட்பங்களின் ஒரு நுனியைக் காணுகிற முயற்சியாக இக்கட்டுரை இருக்கும்.
நானோ தொழில்நுட்பம்
நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பெயின்மேன் தனது புகழ் பெற்ற Caltech விரிவுரையில் "There is plenty of room at the bottom” என்று குறிப்பிட்டார். அவர் அப்படிச் சொன்னது 1959இல். இதன் பொருள் அணுக்கரு அளவீடான 10-15 மீட்டருக்கும் மூலக்கூறுகள் அளவீடான 10-6 மீட்டருக்கும் இடையே ஏராளமான இடங்கள் புதிய கருத்தூன்றுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன என்பதாகும். இந்த இடைவெளியில் ஆய்வுக்கான களம் இருப்பதை பல விஞ்ஞானிகள் உணர்ந்து கொண்டனர்; இடைவிடாத ஆராய்ச்சி மேற்கொண்டனர்; 10-9 மீட்டர் அளவேயான நானோ தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தனர்; அதை உலகிற்கு அர்ப்பணம் செய்தனர். 1974ஆம் ஆண்டு எரிக் ட்ரிக்ஸ்லர் என்பவர்தான் நானோ தொழில் நுட்பத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இன்று நானோ தொழில் நுட்பம் அளப்பரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக முதுமை தடுக்கப்படும் சாத்தியமும், இன்னும் இறவா நிலை, ஆயுள் நீட்டிப்பு, நோயற்ற வாழ்வு, DNA (De-Ribooxy Nucleic Acid) மருத்துவம் போன்ற பலவும் பேசப்படுகின்றன. இனிவரும் காலத்தில் DNAக்களின் குறைபாடுகளை நீக்குவதும், கார்பன் நானோ குழாய்களின் வழியாக புற்று நோயை அழிக்கும் தொழில் நுட்பம் போன்றவையும் இயல்வதாகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறளில் நானோ
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் உள்ள அனைத்துப் பாக்களிலும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
எப்பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும் அந்தத் தோற்றத்தை உண்மையெனக் கொள்ளாமல், அதன் மெய்த்தன்மையைக் காணவேண்டும் என்பது இக்குறட்பாவின் கருத்து. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மையிருக்கும் என்பது மேலோட்டமான பொருள்.
அடுத்ததாக, ஒரே பொருள் பல தன்மைகளைப் பெற்றிருக்கும் என்ற செய்தியும் இந்தக் குறட்பாவில் இருக்கிறது. நீர் என்கிற ஒரே பொருள், பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும், நீராவியாகவும் மூன்று தன்மைகளைப் பெறும். அதாவது, ஒரு பொருள் திடம், திரவம், வாயு என்று பல தன்மைகளைப் பெறலாம். இது சராசரி ஆய்வாளர் கொள்ளும் பொருள். எனில், வள்ளுவன் இக்குறட்பாவில் இன்னும் ஆழமான அறிவியல் செய்திகளைப் பொதிந்து வைத்திருக்கிறான். ஒரு பொருள் நானோ அளவுகளில் அமையுமானால் அவற்றின் துகள் அளவிற்கு ஏற்ப அவற்றின் தன்மையும் மாறுபடும். எடுத்துக்காட்டாக காட்மியம் சல்பைடின் துகள் அளவிற்கு ஏற்ப அதன் ஒளியியல் பண்பு மாறுபடும். ஒரு பொருளின் அளவையும் அதன் மூலம் அதன் தன்மையையும் அறிந்தால்தான் அப்பொருளின் மெய்த்தன்மையை உணராலாம். இந்தச் செய்தியில் நானோ நுட்பம் இருக்கிறது. “ஒரு பொருள் பலதன்மை” (காண்க: படம்) என்பது நானோ நுட்பத்திலிருந்து பெறப்பட்ட அறிவாகும்.
இதே அதிகாரத்தில் இடம்பெறும் இன்னொரு குறள்,
பிறப்பெனும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358)
பிறப்புக்கு முதற்காரணமாகிய அவிச்சை (அறியாமை) கெட, வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என விளக்குகிறார் பரிமேலழகர். அறியாமையை நீக்குவதால் மெய்யுணர்வு பிறக்கிறது. இதனால், அறிவுடையோர் வெளித்தோற்றத்தில் மயங்காமல் பொருளின் மெய்த்தன்மையைக் காண்பார்கள் என்று வள்ளுவன் சொல்வது புலப்படும். இந்த மெய்த்தன்மைதான் புறத்தோற்றத்தில் காணக்கிடைக்காத, ஒரு பொருளுக்குப் பலதன்மையுள்ள நானோ நுட்பமாகும்.
மேற்கூறிய குறளுக்கு அடுத்ததாக வரும் குறள்:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய் (குறள் 359)
நோய்சார்ந்துள்ள DNAக்களைக் கண்டுணர்ந்து, அதன் சார்பு கெடக் காரணமானவற்றை அழித்தால் பின் வரும் சந்ததிகளை நோயற்றவர்களாக மாற்றலாம் என்று இந்தக் குறட்பாவிற்குப் பொருள் கொள்ள முடியும்.
அடுத்து, நானோ அறிவியலால் DNAக்களைத் துண்டித்துச் செப்பனிடும் நுட்பம் நிலையாமை எனும் அதிகாரத்தில் வருகிறது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின் (குறள் 334)
உயிரீரும் என்பது உயிர் செல்களில் வாழும் DNAக்கள் என்று எடுத்துக்கொண்டால், நுண்ணிய வாளது கொண்டு அவற்றை வெட்டிச் சரிசெய்யலாம் என்று வள்ளுவன் சொல்கிறான் என்பது புலப்படும். ‘நாளென’ என்பதற்குக் கலைஞர் கூறும் தெளிவுரை வாழ்நாள் என்பதாகும். எனவே மாலைக்கண், சர்க்கரை வியாதி போன்ற பிறப்பின் மூலமாக ஒருவர் பெற்ற நோய்களை DNAக்களை வெட்டிச் சரிப்படுத்துவதன் மூலம் நேராக்கலாம் (DNA Tweezers) என்ற செய்தி இந்தக் குறட்பாவில் ஒளிந்துள்ளதைக் காணலாம்.இதைப் போலவே நானோ தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட ஆய்வான முதுமை தடுக்கப்படும் சாத்தியமும் குறளில் இடம் பெறுகிறது. அமிர்தத்தைக் குறித்து தமிழில் எண்ணற்ற கதைகளும் பாடல்களும் உள்ளன. சிறந்த சுவையுள்ள பொருளை அமிர்தம் எனக் கூறுவோம். மரணத்தை வெல்லும் அமிர்தத்தைப் பாற்கடலில் இருந்து தேவர்கள் கடைந்தெடுத்தாகக் கூறுகின்றன புராணங்கள். வள்ளுவனும் அமிர்தத்தைக் குறித்துப் பேசுகிறான்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (குறள் 64)
தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக் கரத்தால் அளாவப்பட்ட கூழ் அமிர்தத்தை விட இனிதானதாக ஆகி விடுகிறது. இது நமக்குத் தெரிந்த பொருள். இதில் மக்கள் என்பதைச் சந்ததியினராகவும், சிறுகை எனபதை நுண்கை (Nanoscope) என்றும், அமிர்தத்திற்குச் சாவா மருந்து என்றும் பொருள் கொண்டால், வரும் காலத்தில் அறிவியலாளர்கள் தமது நுண்கைகளால் நானோ நுட்பத்தின் வழிச் சாவாமருந்தைக் கண்டடைவர் என்ற பொருள் இதில் பொதிந்திருப்பதை அறியலாம்.
இன்னும் நானோ நுட்பத்தின் ஆதாரமாகிய நுணுகி நோக்குதலைக் குறித்தும் வள்ளுவன் பேசுகிறான்.
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற (குறள் 710)
நுண்ணறிவு பெற்ற அமைச்சரை அளக்கும் கோல் அரசரின் கண்ணன்றி வேறல்ல. அதுபோன்று மனிதனின் கண்ணால் பார்க்கப்படும் பொருள் மைக்ரோ அளவீட்டில் 10-6 மீட்டர் ஆகும்.
10-6 முதல் 10-10 மீட்டர் வரையிலான அளவீடுகளைக் காண Atomic force (AFM) நுண்ணோக்கிகள் வேண்டிவரும். அரசரின் கண்கள் சாதரணக் கண்கள் போலன்றி இன்னும் சிறப்பானதாக நுண்ணோக்கிகளைப் போல் இருக்க வேண்டும் என்று வள்ளுவன் கூறுவதாகப் பொருள் கொள்ள முடியும். மேலும், மருந்து எனும் அதிகாரத்தில் இடம் பெறும் குறள்கள் அனைத்திலும் நானோ தொழில்நுட்பத்தின் கூறுகளைக் காணலாம்.
மிகினும் குறையினும் நோய்செய்யு றூலோன்வளி
முதலா வெண்ணிய மூன்று (குறள் 941)
இக்குறட்பாவின் பொருள், உணவும் உழைப்பும் மிகின் நோய் செய்யும்; அதுபோல வாதம், பித்தம், சேத்துமம் மூன்றும் நோய் செய்யும் என்பதாகும். இதை DNA இல் உள்ள புரதத்தொடர் மிகினும் குறையினும் அது நோய் செய்யும் என்றும் கொள்ளலாம். இது நானோ பயோ தொழில்நுட்பத்தின் (Nano Biotechnology) ஓர் அங்கமாகும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து (குறள் 950)
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை நான்குவகைப் பாகுபாடு உடையது என்று இதற்குப் பொருள் சொல்கிறார் மு.வரதராசனார். இதில் முக்கியமானது மருந்தாகும். DNA தொடரில் தவறிய கூறினைச் சரி செய்தலே மருந்தாகும். இது நானோச் சொல்லாடலில் ACTG எனப்படும்.
முடிவுரை:
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு (குறள் 425)
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு. அதாவது, உண்மை அறிவு என்பதானது உலகத்தோடு இயற்கையோடு இயைந்திருக்க வேண்டும். இதையேதான் Nano Ethics உம் கூறுகிறது. நானோ ஆய்வில் நாம் சொல்ல வேண்டியதில் ஒரு கோட்பாடு இருக்க வேண்டும், அது உலகத்தோடு ஒத்திருக்க வேண்டும், உலகை அழிக்கும் ஆய்வுகளைத் தவிர்க்கவேண்டும். இந்நன்னெறியைப் பல்வேறு குறட்பாக்களில் நாம் காணலாம்.
‘இல்நுழைக்கதிரில் நுண்ணிய தெரியின்’ என்ற திருவாசகத்தின் கூற்று போல், அறிவியல் என்ற ஒளியுடன் குறட்பாக்களைப் பார்க்குமிடத்து அவற்றில் பல நுண்ணிய அறிவியற் கூறுகள் தென்படுகின்றன.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் (குறள் 427)
இதற்குப் பரிமேலழகர் - வரக்கடவதனை முன் அறிவதே அறிவு என்றும், வருமுன் அறிவதும் அதனை எண்ணுவதும் அறிவுடையார்களின் சிறப்பு என்றும் பொருள் கூறுகின்றார். வள்ளுவன் மானுடத்திற்கு வழிகாட்டியாக பல செய்திகளை அறிவுறுத்துகிறான், அதில் வள்ளுவனுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த நானோ தொழில்நுட்பமும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment