Sunday, July 18, 2010

தொல்காப்பியரின் 'வினாவும் செப்பும்': கருத்தாடல் நோக்கு

தொல்காப்பியரின் 'வினாவும் செப்பும்': கருத்தாடல் நோக்கு

Dr. P.DAVID PRABHAKAR
ASSOCIATE PROFESSOR OF TAMIL
MADRAS CHRISTIAN COLLEGE, CHENNAI-600059
tamilprofessor@gmail.com


0.0 இக்கட்டுரை, தொல்காப்பியரின் செப்பு – வினா சார்ந்த விவாதங்களை முன்வைப்பதன் வழி, சொற்றொடர் அமைப்புக்கு மேம்பட்ட மொழி அலகுகளைத் தொல்காப்பியர் கவனத்தில் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதோடு, அவை கருத்தாடல் நோக்கில் அணுகப்பட வேண்டியதன் இன்றியமையாமையைச் சுட்டிச் செல்கிறது.

0.1 தொல்காப்பியர் சொற்களின் இயல்பையும் சொற்களுக்கிடையே அமையும் உறவையும் விவரிப்பதோடு, சொற்றொடர் அமைப்பில் அவை வழுவின்றி இணக்கமாக அமையவேண்டிய முறைமையினையும் குறிப்பிடுகிறார். கிளவியாக்கத்தில் இடம் பெறும் நூற்பாக்கள் பலவற்றில் 'மயங்கல் கூடா', 'வரையார்' என இடம் பெற்றிருப்பது, வழுகாத்தலை நோக்கமாகக் கொண்டு கிளவியாக்கம் அமைந்திருப்பதை உணர்த்துகிறது. வழாநிலையும் வழுவமைதியும் திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை என ஏழு பிரிவுகளாகப் பகுத்துக் கூறப்படுகின்றன. தொடரின்கண் ஏழு வகையான பிழைகள் ஏற்படலாம் எனப் பால் ராபர்ட்ஸ் குறிப்பிடுவதை இவை பெரிதும் ஒத்திருக்கின்றன என சூ.இன்னாசி (1985: 133) குறிப்பிடுகிறார்.

சொற்றொடர் அமைப்பில் திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை ஆகியவற்றைச் சார்ந்து அமையும் வழு, வழுவமைதிகளைத் தொல்காப்பியரை அடியொற்றி உரையாசிரியர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். திணை, பால், இடம், காலம் ஆகியன சார்ந்து அமையும் வழுக்கள், சொற்றொடர் அமைப்பு சார்ந்த மொழி அறிவை அடிப்படையாகக் கொண்டவை. மரபு வழு பொருத்தமான சொல்லை ஆளும் சமூக மொழிப் பயன்பாடு சார்ந்தது. இதனை மொழியின் சொல்தொகுதி சார்ந்து விளக்கிட இயலும். ஆயினும், வினா-செப்பு குறித்த வழுக்கள் சொற்றொடர் அமைப்பு கடந்ததாகவும், சிலவிடங்களில் தர்க்கம் சார்ந்ததாகவும், அதனையும் கடந்து உரையாடல் நிகழும் சமூகப் பண்பாட்டு பின்னணியில் விளக்கம் பெற வேண்டியனவாகவும் உள்ளன. அதாவது, கருத்துப்பரிமாற்றத்தின் அங்கங்களாக அமையும் சூழல், நபர், இலக்கு, உரைச் செயல், மனப்பாங்கு, உத்திகள், நியதிகள் போன்றவற்றின் பின்புலத்தில் இவற்றை விளக்க வேண்டியுள்ளது. சற்று விரிந்த தளத்தில், பேச்சு குறித்த இனவரைவியல் (Ethnography of Speech) நோக்கிலும் ஆராய இவை இடம் கொடுக்கின்றன.

தொல்காப்பியக் கிளவியாக்கத்தின் நான்கு நூற்பாக்கள் (13-16) செப்பு வினா பற்றிப் பேசுகின்றன. வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும்பொழுது, அவற்றுக்கிடையே நிலவும் உறவு சொற்றொடர் எல்லையைக் கடந்ததாக உள்ளதால் அவற்றைக் கருத்தாடல் (Discourse) நிலையிலேயே விளக்க இயலும். கருத்தாடலின் குறைவாக்கமே (Reduction Process) பனுவலாக (Text) அமைகிறது. ஒருபனுவலில் வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும் நிலையில்,அவற்றுக்கிடையே நிலவும் தொடரிணைவு (Cohesion) கருத்திணைவு (Coherence) ஆகியவற்றை விளக்க வேண்டியுள்ளது. கருத்திணைவு அடுத்தடுத்து அமையும் உரைகளுக் கிடையேயும் (Local Coherence) ஒட்டுமொத்த உரைகளுக்கிடையே பரந்தும் (Global Coherence) அமைவதுண்டு. வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமைந்து கருத்திணைவை வெளிப்படுத்துவன.

1.0 செப்பு வினா வரையறை

'செப்பு என்பது வினாய பொருளை அறிவுறுப்பது' எனச் செப்பையும், 'வினாவானது அறியலுறவை வெளிப்படுத்துவது' என வினாவையும் சேனாவரையர் வரையறுக்கிறார். வினா இன்றியும் செப்பு அமையும் என்பதால், 'வினாயப் பொருளை அறிவுறுப்பது என்ற வரையறை செப்பிற்கு எவ்வாறு பொருந்துகிறது' என்பதற்கு இரண்டு காரணங்களைச் சேனாவரையர் கூறுகிறார்.


வினாவாவது அறிவுறுத்த வருவது. இவ்விலக்கணத்தையே செப்பிற்கும்
கூறின் அது பொருந்தாது.
செப்பு என்ற தமிழ்ச் சொல் 'உத்தரம்' எனும் வட சொல்லுக்கு
இணையானது. வினாயப் பொருளுக்கு விடை தருவதே 'உத்தரம்' எனுன்பார்
வட நூலார். எனவே தமிழ்ச் சொல்லுக்கும் அவ்வாறே பொருள் காண
வேண்டும்.

2.0 செப்பு வினா வழுக்களும், வழுவமைதிகளும்

'வினா வழுவானது வினவிய சொல்லால் பயனின்றி நிற்பது' என்பார் தெய்வச்சிலையார். 'வினா வழுஉ, தான் வினாவுகின்றதனைக் கேட்டான் இறுத்தற்கிடம் படாமல் வினாதல் என ஒன்றேயாம்' எனக் கல்லாடர் வினா வழுவை வரையறுப்பார்.
'கறக்கின்ற எருமை பாலோ சினையோ'
'ஒரு பொருள் சுட்டி இது நெடிதோ குறிதோ'
ஆகிய எடுத்துக்காட்டுகளைச் சேனாவரையர் தருகிறார்.செப்பே வழுவி வரினும் நீக்கப்படாது என்பதை,

'செப்பே வழீ இயனும் வரைநிலையின்றே
அப்பொருள் புணர்ந்த கிளவியான' (தொல். சொல். ௧௫)

எனும் நூற்பாவில் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆயினும், வினா வழுவுதலைப் பற்றி இங்கு குறிப்பிடாததால், வினா வழுதல் இல்லை என்றும், அதனால் அது வழுவி வருதலை வழுவமைதியாகக் கொள்வ தற்கில்லை என்றும் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் செப்பிற்குக் கூறியதைப்போல் வினாவிற்கு வெளிப்படையாகக் கூறவில்லை யாயினும், பின்வரும் நூற்பாக்களில் வினா வழுவமைதிகளைக் குறிப்பிடப்படுவதைச் சேனாவரையர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அவற்றுள் யாது என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாகலும் உரித்தே (தொல். சொல். ௩௧)


வன்புற வரூஉம் வினா விடை வினைச் சொல்
எதிர் மறுத்துணர்த்துதற் குரிமையு முடைத்தே. (தொல். சொல். ௨௪௪)


செப்பு வழுவமைதியைத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். (தொல். சொல். ௧௪,௧௫). நேரடியாகச் செப்பு அமையாவிடினும், வினாப் பொருண்மையோடு பொருந்தியவிடத்து செப்பு வழுவன்று என்பதைத் தொல்காப்பியர் தெளிவாகச் சுட்டுகிறார்.வினாவும் செப்பாதலைத் தனி நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'வினாவெதிர் வினாதல்' எனும் செப்பின் வகையாக உரையாசிரியர்கள் கருதுவர். மேலும், வினா-விடை மரபில் சினையும் முதலும் தம்முள் மயங்கல் கூடா என்பதையும் தனி நூற்பாவில் (தொல். சொல். ௧௬) தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

செப்பு – வினா பற்றிய செய்திகள் கிளவியாக்கத்தின் ௧௩-௧௬ ஆகிய நூற்பாக்களில் மட்டுமின்றி, இவற்றைத் தொடர்ந்து வரும் ௨௮-௩௨, ௩௫-௩௮, ௪௦௦-௪௨, ௪௫, ௬௧ ஆகிய நூற்பாக்களிலும் அமைந்திருப்பதைத் தெய்வச் சிலையார் உரை வழி அறியலாம்.

வினா வழு காத்தலை நுதலிற்று (௩௧)
வினா வழுவமைதலை நுதலிற்று (௩௨)
ஒரு சார் செப்பு வழுகாத்தலை நுதலிற்று (௩௩)

தெய்வச்சிலையார் உரையில் காணப்படும் மேற்காணும் விளக்கங்கள்
கிளவியாக்கத்தின் பிற நூற்பாக்களிலும் செப்பு – வினா பற்றிய செய்திகள் காணப்படுவதைத் தெளிவாகச் சுட்டுகின்றன.

3.0 செப்பு – வினா வகைகள்
3.0.1 செப்பு வகைகள்

செப்பு வகைகளைப் பின்வருமாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்கியுள்ளனர்.

சேனாவரையர்
செவ்வன் இறை (நேரடி விடை)
எ-கா: 'உயிர் எத்தன்மைத்து' எனபதற்கு 'உணர்தல் தன்மைத்து' எனல்
இறை பயப்பது (வேறு வகையில் விடையிறுப்பது)
எ-கா: 'உண்டியோ' எனபதற்கு 'வயிறு குத்திற்று' எனல்

இளம்பூரணர்
வினா எதிர் வினாதல்
ஏவுதல்
உறுவது கூறல்
உற்றதுரைத்தல்
உடம்படல்
மறுத்தல்


தெய்வச்சிலையார்
துணிந்து கூறல்
கூறிட்டு மொழிதல்
வினாவி விடுத்தல்
வாய்வாளாதிருத்தல்

நச்சர்
செவ்வன் இறை
இறை பயப்பது
வினா எதிர் வினாதல்
ஏவல்
உற்றதுரைத்தல்
உறுவது கூறல்
உடம்படல்
மறுத்தல்
சொல் தொகுத்து இறுதல்
சொல்லாது இருத்தல்

கல்லாடர்
உடம்படல்
மறுத்தல்

3.0.2 வினா வகைகள்

இயற்கை மொழிகளில் அமையும் வினா வாக்கியங்களைப் பல்வகையாகப் பிரிக்கலாம் எனக் குறிப்பிடும் ரேட்போர்டு (Radford) எனும் அறிஞர் ஆங்கில வினா வாக்கியங்களை மூவகைப்படுத்துவர்.
Yes-No என விடையளிக்கக்கூடிய வினாக்கள், Wh- எனத் தொடங்கும் வினாக்கள், தொடரியல் பண்புகளில் ஒத்திருப்பதால்( Syntactic behavior )'How' என்னும் வினாவென் கிளவி ஆகியன முதல் வகை. எதிரொலிப்பு-எதிரொலிப்பு அல்லாத வினாக்கள் (Echo-Non Echo) இரண்டாம் வகை. தொல்காப்பியர் குறிப்பிடும் வினா எதிர் வினாதலை இவ்வகையுடன் ஒப்பு நோக்கலாம். நேரடி- நேரடியல்லாத வினாக்கள் மூன்றாம் வகை. முதலிரு வகைகள் மொழி அமைப்பு அடிப்படையிலும் சொற்பயன்பாட்டு அடிப்படையிலும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் வினா வகைகளை மொழியைப் பயன்படுத்துவோர் சார்ந்து அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஓரிரு விடை வகைகளை மொழி அமைப்பு சார்ந்தும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகுத்துள்ளனர்.

வினா வகைகளைப் பின்வருமாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்கியுள்ளனர்.

சேனாவரையர்
அறியான் வினா
ஐய வினா
அறிபொருள் வினா

இளம்பூரணர்
அறியான் வினாதல்
ஐயம் அறுத்தல்
அறிவொப்பு காண்டல்
அவனறிவு தான் கோடல்
மெய்யவற்குக் காட்டல்

நச்சர்
அறியான் வினா
ஐய வினா
அறிபொருள் வினா

கல்லாடர்
அறியான் வினா
ஐயம்
அறிவொப்பு காண்டல்
அவனறிவு தான் கோடல்
மெய்யவற்குக் காட்டல்

இவ்வாறு பிற உரையாசிரியர்களும் பிற இலக்கண நூல்களும் சுட்டும் செப்பு வினா வகைகளையும் ஒப்பிட்டுக் காண இயலும்.

4.0 கருத்தாடல் நோக்கில் செப்பும் வினாவும்

வினா – செப்பு ஆகியவற்றுக்கிடையே அமையும் உறவை மொழி அமைப்பு உறவைக் கொண்டு மட்டும் விளக்குவது கடினம். இவ்வுறவைப் பொருண்மையியல், பயன்வழியியல் ஆகிய தளங்களிலேயே பல இடங்களிலும் விளக்க வேண்டியுள்ளது. இத்தகைய உறவு பெரும்பாலும் மொழி அமைப்பைக் கடந்ததாயும் தர்க்கங்களுக்கு உட்படாததாயும் அமைவதுண்டு.

செப்பு வகைகளைச் செவ்வன் இறை (நேரடி விடை), இறை பயப்பது (வேறு வகையில் விடையிறுப்பது) எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்குவர். இறை பயப்பதாக அமையும் விடைகள் அவற்றுக்குரிய வினாக்களோடு ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வுறவை மொழி அமைப்பு சார்ந்து தொடர்புபடுத்தி விளக்குவது கடினம். உடன்படல், மறுத்தல் போன்ற செப்பு வகைகளை ஓரளவிற்கு மொழி அமைப்பு சார்ந்து விளக்கிட இயலும். இது போன்றே, வினா எதிர் வினாதல் எனும் செப்பு வகையையும் மொழி அமைப்பு சார்ந்து விளக்கிட வாய்ப்பு உண்டு.

தெய்வச்சிலையார் குறிப்பிடும் 'வாய்வாளாவிருத்தல்' எனும் செப்பு வகை தனித்தன்மை வாய்ந்ததாகும். இது உடன்பாட்டுப் பொருளையோ அல்லது அதற்கு நேர் மாறான பொருளையோ உணர்த்தக்கூடும். பொருத்தமற்ற, பொருளற்ற வினாக்களுக்கு 'வாய்வாளாவிருத்தல்' விடையாக அமைவதுண்டு.
எ-கா: வினா: ஆகாயப்பூ நன்றோ தீதோ
விடை: .......................... (வாய்வாளாவிருத்தல்)
வடநூலார் ஒன்பதாவது மெய்ப்பாடாகக் குறிப்பிடும் 'சமநிலை' என்பதோடு இதனைத் தொடர்புபடுத்தலாம். இதனை மொழி அமைப்பு எல்லைக்குள் அடக்கி விளக்க இயலாது.

இது போன்றே, உற்றது கூறல் (எ-கா: உடம்பு நோகிறது) உறுவது கூறல்(எ-கா: உடம்பு நோம்) போன்ற செப்பு வகைகள் வினாக்களோடு கொள்ளும் உறவும் மொழி எல்லைகளைக் கடந்தாகவே உள்ளது.

வினா வகைகளைச் சுட்டும் உரையாசிரியர்கள், வினாவை அமைப்பு அடிப்படையில் விளக்காது, வினாவை எழுப்புபவர்களின் சமூகப் பின்னணி சார்ந்தே வகைப்படுத்தியுள்ளனர். 'இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது' எனும் வினாவை மாணவன் எழுப்பும்போது அறியா வினாவாகவும், ஆசிரியர் எழுப்பும்போது அறி வினாவாகவும் அமைகிறது. அறிவொப்பு காண்டல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல் ஆகிய வினா வகைகளும் கருத்தாடலின் சூழல், வினவுபவரின் சமூகப் பின்னணியைச் சார்ந்துள்ளன.

எனவே, வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும் நிலையில் அவற்றைப் பனுவலின் பகுதியாகக் கொண்டு அவற்றுக்கிடையே நிலவும் பல்வகைப்பட்ட உறவுகளைக் கருத்தாடல் முறையில் அணுகுவதற்குத் தொல்காப்பியரின் சிந்தனை வழிவகுக்கிறது. மேலும், பொருள்கோள், குளகம், நூலின் உத்திகள் போன்ற மரபிலக்கணக் கருத்தாக்கங்களையும் தொல்காப்பியச் செய்யுளியலில் இடம் பெற்றுள்ள வேறு சில கருத்தாக்கங்களையும் இவ்வகையில் விரிவாக ஆராய இயலும்.

துணை நின்றவை

இன்னாசி சூ.,சொல்லியல், 1985
சண்முகம் செ., கருத்தாடல், 2002
சிவலிங்கனார் ஆ.(ப.ஆ),தொல்காப்பியம் உரைவளம்-கிளவியாக்கம், 1982
ஜீன்லாறன்ஸ் செ.,(ப.ஆ),தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள், 2001
Andrew Radford Transformational Grammar, 1988
Karunakaran K. et.al. Tholkappiyar Conceptual Framework: Language, Literature, Society, 1992

No comments:

Post a Comment