Wednesday, June 30, 2010

முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி

முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணிமுனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி.,
முதுகலை தமிழாசிரியர்,
காதிர் முகையதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
அதிராம்பட்டினம். 614701
பட்டுக்கோட்டை வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.மனித இனத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உந்துச​க்தியாக விளங்குவது தாய் மொழியாகும். தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தமிழ்மொழியாகும். தமிழரின் நிலை உயர வேண்டுமானால் புத்தம் புதிய கலைகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் இந்நூற்றாண்டின் செயற்பாடுகளைத் தமிழ்மொழி தன் வாயிலாக விளக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளைத் தமிழ்மொழி ஏற்றாக வேண்டும் என்ற புதிய சிந்தனை முகிழ்த்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அறிவியல்தமிழ் என்ற புதிய நோக்கு பிறந்துள்ளது. இவ்வறிவியல்தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் வா.செ. குழந்தைசாமி ஆற்றியுள்ள பணிகள் குறித்து இவ்வாய்வுக் கட்டுரையில் காணலாம்.
கலைச்சொல்லாக்கம்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் ஏற்க வேண்டும். தமிழில் அறிவியல் நூல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் வழி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும் என்பன போன்ற செயல்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
இது அறிவியல் யுகம். அறிவியலின் பாதிப்பு, இந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையேயும் காணப்படுகிறது. அவர்தம் வாழ்க்கையிலும், கல்வி முறைகளிலும் அறிவியல் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டன எனலாம். நாள்தோறும் அறிவியல் சொற்களும் கருத்துகளும் பல்கிப்பெருகி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்மொழிக்கு ஒலி, சொல், சொற்றொடர் ஆகிய பல நிலைகளிலும் ஒரு தனி அமைப்பு தேவை எனலாம். ஏற்கனவே உள்ள முத்தமிழோடு இத்தமிழையும் சேர்த்து இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்தமிழ் என நான்கு தமிழாகக் கொள்ளலாம். முனைவர் குழந்தைசாமி அறிவியல் தமிழையும் கல்வித் தமிழையும் ஒன்றாகவே கருதுகிறார்.
கலைச்சொல்லாக்க முயற்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உருவாக்கப்பட்ட கலைச்சொல் தொகுப்புகளின் பட்டியலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையும் கொண்ட கட்டுரை ஒன்றை 'கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை' என்ற தலைப்பில் முனைவர் இராதா செல்லப்பன் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் மறித்துவரும் சொற்களை நீக்கி இரண்டு இலட்ச​த்திற்கும் அதிகமான சொற்கள் உருவாக்கப் பட்டிருப்பதாக அவரது பட்டியலிருந்து தெரிய வருகிறது. இக்கட்டுரையின் முடிவாக கலைச்சொற்களை உருவாக்கும் முறைமையில் பொதுவான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
அறிவியல்தமிழ் கலைச்சொல்லாக்கம் 1830‍இல் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்தாலும், அண்மைக்காலத்தில் தான் புது விழிப்புத்தோன்றி இப்பணி செவ்வனே நடைபெறத் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள அறிவியல் தமிழாக்க முயற்சிகளை முனைவர் குழந்தைசாமி சிறந்தன என்று கருதுகிறார். இருப்பினும் கலைச்சொற்களை உருவாக்குவதற்கென்று சில நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையுடைய வராகவும் அவர் விளங்குகிறார். இதனை,
"செய்த அளவிற்கு இப்பணிகள் சிறந்தன. இந்நூல்கள் படிப்போர்க்குப் பயன் தருவன. இந்தப் பின்னணியில் நாம் கருத வேண்டியன‌ பின்வருமாறு :
*துறைச் சொற்களை உருவாகுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளனவா?
*இவ்வெளியீகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துறைச்சொற்கள் முன் கூட்டியே வகுக்கப் பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தவையா?
*இதுவரை, பொதுவான, வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் எவையும் இல்லையெனில் கடந்தகால வெளீயீடுகளின் ஆசிரியர்கள் துறைச்சொற்களைப் படைத்த முறைகளிலிருந்து அவர்கள் அனுபவத்தில் இருந்து, நாம் சில நெறிமுறைகளை வகுப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றனவா?
*துறைச்சொற்களை உருவாக்குவதற்கான அப்படிப்பட்ட நெறிமுறைகள் தேவையா?
என்று அவர் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.

அவரவர் விருப்பிற்கும் புலமைக்கும் ஏற்ற வகையில் கலைச்சொற்கள் அமைக்கப்படுவதால் அவை வரைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக கலைச்சொல் என்பது, "சாஸ்திரம், விஞ்ஞான‌ம் என‌ வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ Science இன்று அறிவிய‌ல் என‌த் தரப்படுத்த‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌தைப் போல‌வே க‌லைச் சொற்க‌ள் உருவாக்க‌ம் குறித்த‌ வழிகாட்டல் ப‌ணியினை முனைவ‌ர் குழந்தைசாமி மேற்கொண்டுள்ளார். இன்றுவரை துறைச்சொற்களை உருவாக்குவதற்கு அவற்றை ஒலிப்பெயர்ப்பதா, மொழிபெயர்ப்பதா, புதிய‌சொற்களைப் படைப்பதா என்பதில் நமக்குள் ஒரு தெளிவில்லை. ஒலிப்பெயர்ப்புக்களில், 12 உயிர், 18 மெய், 1 ஆய்தம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ஒலிகள் நமக்குப் போதுமா, போதாவா என்பதில் இன்று நம்முள் ஒத்த கருத்தில்லை. எல்லோருடைய ஒருங்கிணைந்த பணியால் உருவாக்கப்பட வேண்டியது கலைச்சொல்லாக்கம் என்ற தெளிவானக் கொள்கையுடையவர் என்பது தெளிகிறது. அவ‌ர் 1. கலைசொற்க‌ள் உருவா‌க்கும் வ‌ழிக‌ள், 2. க‌லைச்சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள், 3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள் ஆகிய‌ மூன்று செய‌ல்பாடுக‌ள் வ‌ழி இப்ப‌ணிக்கான‌ க‌ருத்துக‌ளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :
கலைசொற்க‌ள் உருவ‌க்கும் வ‌ழிக‌ள்
"1. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்பப் பொருள் கொண்டு பயன்படுத்துதல்.
2. தற்கால இலக்கியங்களிலிருந்து சொற்களைப் பயன்படுத்துதல்.
3. பேச்சுமொழியிலிருந்து தகுந்த சொற்களை எடுத்தாளல்.
4. தொடர்புள்ள பிறமொழிச் சொற்களைக் கடன் பெறல்.
5. பிறமொழித் துறைச்சொற்களை மொழிபெயர்த்தல்.
6. புதுச்சொற்களைப் படைத்தல்.
7. உலக வழக்கை அப்படியே ஏற்றுக்கொள்ளல்"
இவையே கலைச்சொற்களை உருவாக்க‌ அவர் கூறும் வழிமுறைகளாவன. மேலும், அறிவியல் தமிழாக்கத்தில் நாம் உருவாக்க வேண்டிய துறைச் சொற்கள், குறியீடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை நான்கு வகையினவாகப் பாகுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார். அவை,
1. மாற்றம் எதுமில்லாது உலக அளவில் பொதுமையானவையாகப் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள்.
2. மாற்றமில்லாது அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்தப்பட‌ வேண்டிய சொற்கள்.
3. மாற்றமில்லாது ஒலிபெயர்ப்பதா, அல்லது புதிய சொல்லை உருவாக்குவதா என்ற கருத்து வேறுபாடுகட்கு இடந்தரும் சொற்கள்.
4. புதிய சொற்கள் உருவாக்கப்பட்டேயாக வேண்டிய சொற்கள்
என்பனவகும். இவ்வழிகாட்டல்களின் படி கலைச்சொற்கள் உருவாக்கப் பட்டால் அறிவியல் தமிழ் வளர்ச்சி செம்மையடையும்.
2. க‌லைச் சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள்
கலைச்சொல் அகராதித் தொகுப்புகள் வெளியிடும் முறையை இரு அடிப்படைப் பிரிவுகளாகக் முனைவர் குழந்தைசாமி நெறிபடுத்தியுள்ளார். அவை,
"பகுதி (1):அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, சமுதாய இயல்கள், கலை, மொழி, இலக்கியம், சட்டம், ஆட்சி போன்ற பெரும் பிரிவுகளை எடுத்து, இந்த ஒவ்வொன்றுக்கும் பொதுவான சொற்களைத் தனித்தனித் தொகுதிகளாகத் தயார் செய்யலாம்.

பகுதி (2): பகுதி (1)இல் உள்ள பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழ்வரும் கிளைப் பிரிவுகளுக்கான கலைச்சொற்கள் இப்பிரிவில் இடம்பெறும். சான்றாக, பொறியியல் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அனைத்துப் பொறியியல் தொழில் நுட்பங்களுக்கும் பொதுவான சொற்கள் பகுதி (1)‍-லும், குடிமைப்பொறியியல், மின்சக்திப் பொறியியல், எந்திரப்பொறியியல் போன்ற தனித்தனிப் பிரிவுகட்கான கலைச்சொற்கள் அந்தந்த தலைப்புகளில் பகுதி (2)‍-லும் இடம் பெறலாம்." என்பனவாகும். இந்த வழிகாட்டலின் அடிப்படையில் கலைச்சொல்லாக்கப்பணி நடைபெற்றால் பொருட்செலவும் கால விரையமும் குறையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள்
இந்தியத் துணைக் கண்டத்திலேயும் வெளியிலேயும் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனி அலுவலர்கள் தொகுத்துள்ள எல்லா கலைச்சொற்களையும் திரட்ட வேண்டும். இதற்கெனத் தனித் தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று முனைவர் குழந்தைசாமி கருதுகிறார். அதற்கு 'கலைச்சொல் வங்கி' என்று பெயரிட வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். அத்தலைமை யகத்தில் சேர்ந்த கலைச்சொற்கள் அனைத்தையும் கணிப்பொறியில் தேக்க வேண்டும். அக்கலைச்சொற்கள், தரப்படுத்தப்பட்டவை, தரப்படுத்தப்படாதவை என்ற இரு பிரிவுகளாக வகைபடுத்தப்பட வேண்டும். அக்கலைச்சொல் வங்கி அனைவருக்கும் இணையம் போன்ற இணைப்புச் சாதனம் வழி பரவலாக்கப்பட வேண்டும்.
முனைவர் குழந்தைசாமி கூறுவதன் அடிப்படையில் கலைச்சொல் வங்கி அமைக்கப்படுமானால் கலைச்சொல்லாக்கப் பணியின் முழுமையான பயனை எல்லோரும் பெறலாம். இதனால் எவர் வேண்டுமானாலும் தேவையான துறைச்சொற்களைப் பெறமுடியும். மேலும், அறிவியல் தமிழாக்க நூல்கள் செம்மையடைய வாய்ப்புக்களும் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இதுவரை உருவாகியுள்ள கலைச்சொற்களை அறிந்துகொள்ள வழியும் உள்ளன.
எழுத்துச் சீர‌மைப்பு
வ‌ள‌ர்ந்து வ‌ரும் அறிவிய‌ல் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சிக்கேற்ப‌ மொழி எல்ல‌ நிலைக‌ளிலும் வளைந்து கொடுத்து வ‌ள‌ர‌ வேண்டிய‌ கால‌ச்சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து. அறிவியல்தமிழின் வளச்சிக்குத் தமிழ்மொழியின் வரிவடிவ மாற்றம் அவசியமான தேவையாக அறிஞர்கள் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அவ்வறிஞர்கள் வரிசையில் அறிவியல் அறிஞரான முனைவர் குழந்தைசாமியும் எழுத்து சீரமைப்பு குறித்து சிந்தித்திருப்பது நோக்கத்தக்கது.
தமிழ் வரிவடிவத்தில் மாற்றமும், திருத்தமும் பண்டைக்காலம் முதல் இடம் பெற்று வந்திருக்கின்றன. முனைவர் குழந்தைசாமியின் எழுத்துச்சீரமைப்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வளர்ந்து வந்துள்ள எழுத்துச்சீரமைப்புச் சிந்தனைகளைத் தொகுத்துக்கூறி அவற்றின் அவசியத்தையும் விளக்குவதாகும். மேலும், அவரது பரிந்துரைகள் சிலவும் அமைந்துள்ளன. இதில் அவருக்கே உரிய சீரிய சிந்தனைகளும், அணுகுமுறைகளும் காணப்படுகிறது. அவரின் எழுத்துச் சீரமைப்பு,1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம், 2. உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம், 3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம் என்ற முறைகளில் அமைந்துள்ளது.
மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம்.
மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் அகர வரிசை பதினெட்டிற்கும் உள்ள வேறுபாடு மெய்யெழுத்துக்களின் மேல் இடப்படும் புள்ளி மட்டுமே ஆகும். அப்புள்ளியை க,ங,ச,.....ற,ன முதலியவற்றின் வலது புறத்தில் இட்டால் மற்ற உயிர்மெய் வரிசைகளைப் போல ஒரே சீர்மை ஏற்படும். இதனால் க,ங,ச,.....ற,ன என்ற பதினெட்டு வடிவங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். தனியே க்,ங்,ச்,....ற்,ன். என்ற பதினெட்டு வடிவங்கள் தேவையில்லை.
2 உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம்.
உயிர்மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் இணைந்த கூட்டொலிகளால் ஆனவை. இக்கூட்டொலிகளின் வடிவங்களில் சிலவரிசைகளில் ஒரு சீர்மையும் சிலவரிசைகளில் சீர்மைக்குறைவும் காணப்படுகின்றன. அதாவது உயிர்மெய்யில் அகர வரிசைத் தொடங்கி ஒளகார வரிசை வரையிலுள்ள 12 வரிசைகளில், இகர, ஈகர, உகர, ஊகாரம் ஆகிய நான்கு வரிசைகளில் சீர்மைக்குறைவு காணப்படுகிறது. எவ்வாறெனில், உயிர்மெய் எழுத்துக்களில் கா, கெ, கே, கை, கொ, கோ, கெள இவற்றில் குறியீடுகள் வலதுபுறம். இடதுபுறம் ஆகிய இருபுறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அஃதவது மெய்யோடு பிணையாமல் தனியகவே இருக்கின்றன. அதுவே கி, கீ, கு, கூ இவற்றில் குறியீடுகள் பிணைந்து காணப்படுகின்றன. மற்ற வரிசைகளில் பயன்படுத்தப் படும் (துணைக்கால்,கொம்பு...) நான்கு குறியீடுகள் போலவே இவற்றிற்கும் தனியான குறியீடுகள் பயன்படுத்தாமல் இந்நான்கு வரிசைக்கும் 72 குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. நான்கு குறியீடுகளால் அறிய வேண்டிய எழுத்துக்களை 72 குறியீடுகளால் அறிய வேண்டிய சிரமம் உள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, இங்கு சீர்திருத்தம் தேவை என்பதை உணர முடிகிறது. இச்சீர்திருத்தத்திற்கு முனவர் குழந்தைசாமி அவர்கள் செயல்பாடுகள் தெ.பொ.மீ., மு.வ., கி.வா.ஜகன்நாதன் கருத்துக்களைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது.
பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, இகர, ஈகார உயிர்மெய் வரிசைகளுக்கு, இப்பொழுது பயன்படுத்தும் மேல் விலங்குகளை யொத்த குறியீடுகளையே வலது பக்கத்தில் பயன்படுத்தலாம். உகர, ஊகார வரிசைகட்கு கிரந்த எழுத்துகளுக்குப் பயன்படும் குறியீடுகளை உருவ அளவில் சிறுமாறுதல்கள் செய்து பயன்படுத்தலாம் என்பதாகும். இம்மாற்றமானது, தொல்காப்பிய விதிகட்கோ, நன்னூல் விதிகட்கோ புறம்பானதன்று. இவர்தம் எழுத்துச்சீர்திருத்த மாற்றத்தை ஏற்று அண்ணா பல்கலைக் கழகமும் இந்துஸ்தான் தொலையெழுதி நிறுவனமும் இணைந்து இரு மொழி தொலையெழுதியை உருவாக்கியுள்ளன.
முனைவர் குழந்தைசாமியின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழ் வரிவடிவம் சீரமைக்கப்பட்டால், தமிழ்நெடுங்கணக்கில் இப்பொழுதுள்ள 247 வரிவடிவங்கள் குறைந்து 39 வரிவடிவங்களில் (30 முதன்மை எழுத்துகளும் 9 குறியீடுகளும்) தமிழை எழுதிவிட முடியும்.
3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்.
பலநூற்றாண்டுகளாகக் கிரந்த எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது. அறிவியற் கருத்துக்களும், அறிவியற் கண்டுபிடிப்புகளின் பெயர்களும் வேதிப்பொருட்களின் பெயர்களும் இன்றைக்குக் கிரந்த எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி எழுதும் வழக்கம் நிலவி வருகிறது.
கிரந்த எழுத்துக்கள், வடமொழி எழுத்துக்கள் அல்ல, வடநாட்டிலிருந்து வந்தவையுமல்ல. பல்லவர் காலத்தில் வடமொழி இலக்கியங்களை, நூல்களைக் கற்க விரும்பியபொழுது, தமிழர்கள் தேவநாகரி வரிவடிவத்தில் கற்றதாகச் சான்றுகள் இல்லை. அன்று தமிழகத்தில் வழக்கிலிருந்த வரிவடிவத்தோடு, மேலும் தேவைப்படும் ஒலிகட்கு, உருவத்தில் அதனுடன் இணைந்த சில எழுத்துக்களை உருவாக்கினார்கள். இந்த வகையில் அமைந்ததுதான் கிரந்த வரிவடிவம். ஆனால், பின்னர் தமிழ் வழக்கில் நமது முன்னோர் அந்த வரிவடிவத்தில் சில எழுத்துகளை மட்டுமே தேவை கருதி ஏற்றனர் என்ற உண்மைக்கருத்தை முனைவர் குழந்தைசாமி வைக்கிறார்.
தமிழ் எழுத்துகளிலிருந்து பிறந்தவைதான் கிரந்த எழுத்துகள் என்பது அவரது கூற்றால் உணரலாம். இருப்பினும் ஆய்த எழுத்தைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துக்களின் ஒலியைப் பெற முடியும் என்றும் அவர் வழிகாட்டுகிறார். சான்றாக ஹ = ஃக, ஸ = ஃச பயன்படுத்தலாம்.
முனைவர் குழந்தைசாமியின் 'எழுத்துச் சீரமைப்பு' என்பது எழுதும் முறையை எளிமைப்படுத்துவதே அன்றி, ஒலி எழுத்து எதையும் இழப்பது அன்று. இழப்பதற்கு இடமளிப்பதுமன்று.
துணைவரிவடிவச் சிந்தனை
தமிழ் வரிவடிவத்துடன் இணையாக, சில குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட நோக்கங்கட்காக இன்னொரு வரிவடிவத்தையும் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை முனைவர் குழந்தைசாமி கூறியுள்ளார். அதுவே அவர்தம் துணை வ‌ரிவடிவச் சிந்தனையாக விளங்குகிறது. 'துணை வரிவடிவம்' என்பது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் வரிவடிவத்தைக் கைவிட்டுவிட்டு, மற்றொரு வரிவடிவத்தை ஏற்பது என்பதன்று. இருக்கின்ற வரிவடிவத்தோடு தேவையைக் கருதி துணை வரிவடிவத்தையும் பயன்படுத்துவதாகும்.

இன்றைய தமிழுக்கு இலக்கணம்
தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஓர் இலக்கணநூல் எழுதப்படாத குறையை நன்னூல் நிவர்த்தி செய்தது. நன்னூல் கி.பி.13ஆம் நூற்றாடில் பவணந்தியாரால் எழுதப்பட்டது. கடந்த 700 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அலசி, ஆய்ந்து முறையானவற்றை ஏற்று எழுதப்பட்ட இலக்கணம், தொல்காபியம் போல இல்லை. இருப்பினும் ஓரளவுக்காவது அறிஞர் உலகம் ஏற்றுக்கொண்டதெனப்படும் இலக்கணம் இன்றையவரை உருவாக்கப் படவில்லை. அத்தகைய இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக முனைவர் குழந்தைசாமி காணப்படுகிறார்.

இதற்கான ஓர் அமைப்புத் தேவை. அது புலவர்கள் கூட்டமன்று. பண்டிதர், படைப்பாளர், பத்திரிக்கைத் துறையினர், அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் போன்ற (பயன்படுத்தும்) பெருமக்கள் கூட்டத்தினின்று, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். அவரது இந்த வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்றுள்ளது என்பதை, "1998 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 'தமிழ் இலக்கண நூலினை மீண்டும் உருவாக்க வல்லுநர்களைக் கொண்ட இலக்கணக்குழு அமைக்கப்படும்' என்ற அறிவிப்பிலிருந்து அறியலாம்.

1 comment:

  1. நல்லவரின் கருத்துக்களை நாடி வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்வையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    நம் அரசு அமைத்துள்ள குழுக்களுக்குப் பஞ்சம் இல்லை. அவற்றின் செயல்பாடுதான் இன்று வேண்டப்படுகிறது.
    அன்புள்ள
    பொதுவன் அடிகள்

    ReplyDelete