திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்
முனைவர் அ. பரிமளகாந்தம்
இணைப் பேராசிரியர்
அகராதியியல்
பி.எஸ். தெலுங்குப் பல்கலைக்கழகம்
ஐதராபாத் – 500 004
முன்னுரை
சமுதாயமாகச் சேர்ந்து வாழும் மனிதர்கள் நல்வழியில் நடக்க நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் ஆன்றோர்கள் நல்கியுள்ளனர். இலக்கிய வளம் நிறைந்த மொழிகளில் இலக்கியங்களும் எண்ணற்ற எண்ணிக்கையில் உள்ளன. அவ்விலக்கியங்கள் உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்திச் செம்மைப் படுத்துவதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாகுவதற்கும், நல்லனவற்றை மேற்கொள்வதற்கும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதற்கும், பிறரை நல்வழியில் செலுத்துவதற்கும் பயன்பட வேண்டும் என்கிறார் வைகவுண்ட் மன்லே (Selected Essays From The Writing Of Viscount Manlay P.51). அத்தகைய இலக்கியங்களை நல்கிய சான்றோர்களில் ஒருவர்தான் தெய்வப்புலவர் என்று மக்களால் கொண்டாடப்படும் திருவள்ளுவர். அன்னாரின் திருக்குறளில் சொல்லப்படாத செய்திகளே இல்லை எனலாம்.
நோக்கம்
இந்தக் கட்டுரையின் நோக்கம் வள்ளுவர் நல்கிய வாழ்வியல் நீதிகளை ஆராய்ந்து பகுத்துக் கூறுவதாகும். இக் கட்டுரையில் வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகளாக, கல்வியால் ஏற்படும் நன்மை, நீத்தார் பெருமை, இல்வாழ்க்கை நெறி, இல்வாழ்வான், இல்லாளுக்கு இருக்கவேண்டிய பண்புகள், விருந்தோம்பலின் சிறப்பு, பொதுவாக மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எனப் பல நீதிகள் பகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகள் தமிழ்க் குடிமகன் ஒருவனுக்கு மட்டுமன்றி, உலகில் மனிதனாகத் தோன்றிய அனைவருக்கும் உரிய வாழ்வியல் நீதிகளாக அமைந்திருப்பதே திருக்குறளின் சிறப்பாகும்.
கல்வியின் சிறப்பு
உலகில் பிறந்த அனைவருக்கும் பொதுவாக, ஆரியம் கூறும் சாதி, இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் சமமானவர்களே என்பதைப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகின்றார். விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் உறுதிப் பொருளான கல்வியால் ஒருவன் அடையும் சிறப்புகளையும் அக் கல்வியைக் கல்லாதவன் மேல் குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கீழ் குலத்தில் பிறந்தவனாகவே கருதப்படுவான் என்றும், கீழ் குலத்தில் பிறந்தவன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக இருப்பின் கல்லாத மேல்குடிப் பிறப்பானைக் காட்டிலும் உயர்ந்தவனாகவே கருதப்படுவான் என்பதைக் கீழ்கண்ட குறளில் சொல்கிறார் திருவள்ளுவர்
“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள் 409)
கல்வியின் பெருமையைக் கூறிய திருவள்ளுவர் வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றுரைத்து சமூகத்தில் மேல் தளத்தில் இருப்பவனனாலும், கீழ்மட்ட நிலையில் இருப்பவனனாலும், தான் வாழும் உலகுடன் ஒத்துப் பொருந்தி வாழத் தெரியாதவன் எத்தனை உயர்ந்த கல்வியைக் கற்றவனாகவே இருந்தாலும் கல்லாதவனாக, அறிவற்றவனாகவே மதிக்கப்படுவான் என்பதை,
“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (குறள் 140)
என்ற குறள் மூலம் விளக்குகிறார்.
அவ்வாறு கற்ற கல்வி பல்லோர் முன்னிலையில் மதிப்பையும், கௌரவத்தையும் உயர்த்துவதுடன், பெற்ற தாய் அத்தகு மகனைப் பெற்றதற்காகப் பெறும் மக்ழ்ச்சியைப் பின் வரும் குறள் மூலம் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.
நீத்தார் பெருமை
திருக்குறளின் அடிப்படைத் தத்துவமே அறம், பொருள், இன்பம் மூலமாக வீடு பேற்றினை அடைவதுதான். அத்தகைய வீடு பேற்றை அடைய இரு வகை அறங்கள் இருப்பதாகக் கூறுகிறார் திருவள்ளுவர். ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம். இவ்விரண்டு அறங்களிலும் இல்லறமே மிகச் சிறந்தது என்றும், இல்வாழ்வை மேற்கொண்டு அறநூல் செப்பிய வழியில் வாழ்ந்து சிறந்த மனைவியுடன் நன்மக்களைப் பெற்று தருமவழியில் நடந்து, வீடுபேற்றினை அடைவதற்காக துறவறம் மேற்கொள்வதையே சிறந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார் என்பதைக் கீழ் கண்ட குறள் உணர்த்துகிறது.
“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” (குறள் 23)
மேலும் வயதால் ஒருவரைப் பெரியவர் என்று கருத முடியாது என்றும், அரிய செயல்களைச் செய்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும், பெரியவராக மதிக்கப் பெறுவர் என்றும் அவ்வாறு செயற்கரிய செயலை செய்ய இயலாதவர் வயதில் பெரியவராக இருந்தாலும் சிறியவராகவே கருதப் படுவர் என்றும் குறள் 26 மூலம் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.
“செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாக தவர்” (குறள் 26)
இல்வாழ்க்கை
வீடு பேற்றை அடைய துறவறத்தை விட மிகச் சிறந்தாகக் கருதப்படும் இல்வாழ்க்கை, தற்காத்துக் கொண்டு தற்கொண்டானையும் பேணிப் பாதுகாக்கும் இல்லாளையும், இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று சொல்லுமளவுக்கு கல்விக் கேள்விகளில் சிறந்த மகனையும் பெற்று பிறன் பழிப்பு இல்லாத வாழ்க்கையே பண்பும் பயனும் நிறைந்தகாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். இதையே,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள் 45)
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் 49)
என்ற குறள்கள் மூலம் விளக்குகிறார்.
இல்வாழ்வான் இல்லாளிடம் இருக்க வேண்டிய பண்புகள்
இல்வாழ்வான் கடமையைக் கூறப்போந்த திருவள்ளுவர் அறநெறியில் அதாவது பழி பாவத்திற்கு அஞ்சி சம்பாரித்த செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு வந்தால் அவன் சந்நிதி என்றும் நிலைத்து நிற்பது மட்டுமின்றி அழிந்து போகாமலும் இருக்கும் என்பதை,
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் 44)
இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஆண்மகன் தான் நல்வழியில் ஈட்டிய பொருளை எவ்வாறு பயன்படுத்தினால் சந்ததி நிலைக்கும் என்று 44 வது குறளில் சொல்லிய வள்ளுவர் அத்தகைய ஆண்மகனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அமையும் மனைவி எத்தகையவளாக இருந்தால் தன்னையொத்த மனிதர்களின் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்பதையும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர்
“அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று” (குறள் 150)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறள் மூலம் இன்ன அறவழியில் நடக்கவேண்டும், இன்னின்ன நற்காரியங்கள் செய்யவேண்டும், என்று வரையறுத்துக் கொள்ளாவிட்டாலும் மனைவியிருக்கப் பிறருக்குச் சொந்தமான பெண்ணை நினையாமலாவது இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.
அவ்விதம் அறநெறியில் பிறன் மனை விழையாது இல்வாழ்வு மேற்கொண்ட ஆண் மகனுக்கு அவனைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும் நற்பண்புகளுக்கு உறைவிடமான கற்பு எனச் சிறப்பித்துக் கூறப்படும் நிலைகுலையா மனஉறுதி கொண்ட பெண் மனைவியாக வாய்க்கப் பெறாவிட்டால் ஏறுபோல் பீடு நடை போடமுடியாது என்பதைப்.
“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை” (குறள் 59)
விருந்தோம்பல்
தமிழர்களின் இன்னும் சொல்லப் போனால் இந்திய மண்ணின் தலையாய மிகச் சிறந்த குணம் வீட்டிற்கு வந்த விருந்தினை மனம் கோணாமல் உபசரித்து வழியனுப்புவது.
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள் 86)
வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு வரும் விருந்தினரையும் எதிர்பார்த்திருந்து அழைத்துப் போற்றுவான். வானத்தவர்க்கு நல்ல விருந்தினராகச் சென்று சேருவான் வீட்டிற்கு வந்த விருந்தினரை நன்முறையில் உபசரிக்காவிட்டால் அந்த விருந்தினரின் நிலை குறித்து
“மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)
எல்லா மலரினும் மென்மையானது அனிச்சம்பூ. அப்பூவை முகர்ந்து பார்த்தால் வாடி விடும். ஆனால் வரும் விருந்தினர் அப்பூவினும் மென்மையானவர் என்றும், அவ்விருந்தினரை விருந்தோம்பல் செய்வான் முகம் மாறி நோக்கினாலும் அவ்விருந்தினர் வாடி விடுவார்கள் என்று விருந்தோம்பல் என்ற வாழ்வியல் கூற்றின் மென்மையை அனிச்ச மலருக்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
இவ்வாறாக இல்வாழ்க்கையில் வாழ்வியல் கோட்ப்பாட்டைக் கூறும் வள்ளுவர் தனிமனிதனுக்கென்று சில வாழ்வியல் நெறிகளையும் கீழ்கண்ட விதமாகக் கூறுகிறார்.
இன்னா செய்யாமை
ஒருவன் தான் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கவேண்டும் என்றும் ஒருவருக்குத் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே அத் தீங்கை அனுபவிக்க நேரும் என்ற நீதியையும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள் 319)
ஒருவன் தனக்கு இன்னா செய்யும் போது திரும்பி ‘did for tat’ என்று பழிக்கு பழி வாங்காமல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற பைபிளின் பண்பைப் போல தீமை செய்தவன் நாணும் விதமாக நன்மை செய்து விடவேண்டும் என்று
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள் 314)
கூறுகிறார்.
நன்றி மறவாமை.
உலகமயமாதலால் உலகம் சுருங்கியதென்னவோ உண்மை. உலகம் சுருங்கியது போல மனிதனின் மனமும் இன்றைய சூழலில் சுருங்கிவிட்டது. . அண்டைஅயலாருடன் எவ் வகையான உறவும் இன்றி மாடமாளிகைகளாகக் கட்டப்பட்ட ப்ளாட்டுகளில் மனிதன் தனித்து விடப்பட்டான் என்பதும் உண்மைதான். தனியான மனிதனிடம், இயல்பாக இருக்கவேண்டிய மனிதநேயமே இல்லாமல் போன பிறகு செய்நன்றி போன்றறவற்றைப் பற்றி யோசிக்க மனிதனுக்கு நேரம் எங்கே இருக்கிறது? ஆனாலும் உரிய காலத்தில் செய்யப்பட்ட உதவி கடுகளவே யானாலும் மறந்து விடாமல் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற வாழ்வியல் கோட்பாட்டைக் கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்
“தினைத்துணை நன்றிசெயினும் பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவர்” (குறள் 104).
புறங்கூறாமை
மனிதனுக்கு மனிதன் தீங்கு செய்யாதது மட்டுமல்ல; செய்த தீமையை மன்னித்து விடவேண்டும் என்று கூறும் வள்ளுவர் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது புறம் கூறக் கூடாது என்றும் கூறுகிறார். அறம் என்ற சொல்லை வாயினால் கூட சொல்லாதவனாக இருந்தாலும் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசாமல் இருந்தால் அதுவே சாலச் சிறந்தது என்பதை கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்.
“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது” (குறள் 181)
புறங்கூறக்கூடாது என்று போதித்த வள்ளுவர் பேசும் மொழிகளும் பயனுடையதாக இருக்கவேண்டும் என்றும் காமசோமா என்று பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது என்று.
“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்” (குறள் 200)
என்று அறிவுரை கூறுகிறார்.
இனியவை கூறல்
மனிதனின் வாழ்நாள் சிறிது. அதில் சாதிக்கவேண்டியவை எண்ணற்றவை.. கூடி வாழும் மனிதர்களுடன் நல்லுறவு இருந்தால் தான் வாழ்க்கையில் சில நல்ல காரியங்களைச் சாதிக்கமுடியும். நல்லுறவு கொள்ள நன்மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் புறங்கூறக் கூடாது; பயனற்ற சொற்களைப் பேசக் கூடாது என்று திருவள்ளுவர் இனிய மொழிகளையே பேசவேண்டும் என்றும், நல்ல கனிந்த கனி கையிலிருக்கும்போது வெக்காய் போன்ற கொடூரமான வார்த்தைகளை ஏன் பேசவேண்டும் என்று கேட்கிறார்,
“இனிய உளவாக இன்னாதல் கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” (குறள் 100)
என்கிறார்.
மனத்தூய்மை
பிறருக்குத் தீங்கு செய்யாமை மட்டுமல்ல; இன்சொல்லையே பேச வேண்டும் என்று கூறும் வள்ளுவர் மனமும் எவ்வித களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தலே அறம் என்றும் மனத்தூய்மையற்ற செயல்கள் யாவும் ஆரவாரச் செயல்கள் என்றும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். .
“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)
ஒருவன் தன் மனத்தின் கண் குற்றம் இல்லாதவனாக இருத்தல் வேண்டும். அதவே அறன் எனப்படுவதாகும். மனத்தூய்மையின்றிச் செய்யப்படும் பிற அனைத்துமே ஆரவாரத்துடன் செய்யப்படுபவனவேயாகும்.
முடிவுரை
பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறி நீத்தார் பெருமை இல்வாழ்க்கை, இல்வாழ்வான், இல்லாள் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும், ஒவ்வொரு மனிதனிடம் இருக்கவேண்டிய குணங்களாக இனியவை கூறல் இன்னா செய்யாமை, நன்றி மறவாமை, புறங்கூறாமை, விருந்தோம்பல், மனத்தூய்மை போன்றவற்றை வாழ்வியல் நீதிகளாக விளக்கியுள்ளமை இக் கட்டுரையின் மூலம் விளங்குகிறது.
துணை நூல்கள்
1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.
2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.
3. ந. முருகேச பாண்டியன், "திருவள்ளுவர் என்ற மனிதர்", வள்ளுவம் இதழ் (வைகாசி - ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே - 2000.
4. மு. கருணாநிதி, "திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்", கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.
5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.
6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.
7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.
8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி - சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11